அதென்னவோ தெரியவில்லை!!
கதையோ காவியமோ
கற்பனையோ நிஜமோ
எதிலும்
தன்னையே கதியென்று
நினைத்து இருப்பவனையே
இறைவனும் ஏமாற்றிப் பார்க்கிறான்
பாவம் தன்னைவிட்டால்
இவனுக்காக யார் வந்துவிடப்போகிறார்கள்??!!
என்ற எகத்தாளத்தில்!!!
-
தயக்கமோ பயமோ
விட்டுக்கொடுத்தலோ விலகி நிற்றலோ
எதுவெனத் தெரியவில்லை
இனம் புரியா உணர்வுகளில் தொலைந்து
விளக்கிட முடியா வலிகளில் தோய்ந்து
உரிமையாய் உரைத்துக் கேட்க வழியின்றி
ஓசையற்று ஒத்தையில் ஒதுங்கிக் கொள்ளும்
ஆசைகள் ஓராயிரம்.... ஆம்!!!
காலத்தின் களைப்பில்லா ஓட்டமதில்
ஊமையாய் உறங்கி விடுகின்றன
ஆசைகளோடு இணைந்து அர்த்தமற்ற ஏக்கங்களும்-
அழகான காலைப்பொழுதில்
அசைந்தாடும் தூளிதனில்
கருமுகில் திரட்டி வடித்த
வட்டக்கருவிழிகள் உருட்டி நீ விழித்திட
சட்டென மின்னிய மின்னலென
சோம்பல் முறித்து நீ கை நீட்ட
சடசடவெனப் பொழிந்திடும் மழைத்துளியாய் பாதச்சலங்கை சப்தமிட
மழலைமொழி கண்டு
மதிமயங்கிய சோலைபோல
மலர்வாய் மலர்ந்து
வானவில்லாய் நீ சிரிக்கையிலே
சில்லென்ற வானிலையாய்
மாறியே போனது என் மனம்
-
கருமுகில் கூட்டம் கானம் இசைத்திட
எழிலியின் எழில்மிகு வானவெடியில் புவனம் மூழ்கிட
கழனியின் கைப்பற்றி
நிலமகள் அகங்குளிர்ந்திட
மணமணக்கும் மண்வாசனை விருந்துடன்
இனிதே ஆரம்பமானதோ
பருவ மழைத் திருவிழா!!!
-
பொக்கிஷ நேரங்களையும்
இனிமைப் பொழுதுகளையும்
களவாடிச் சென்று
தனிமையைப் பரிசாக்கி
எனைப் பரிகாசம் செய்து
மகிழ்வாய் இருந்திட எனக்கு
அறிவுரை கூறும் காலத்திற்கு
நீயும் நண்பனாகி விட்டாயா??
நீயோ
யாருமற்று நிர்கதியாய் நிற்கும்
நம் நட்பைக் கூட அறியாமல்
எளிதாய் கடந்து செல்கிறாய்
இதுதான் வாழ்க்கை என!!!
நானோ
கடல் அலையில் கலந்திட்ட மழைநீரைத்
தேடித்தவித்திடும் கருமுகில் போல
கணமும் தேடித் தவிக்கிறேன்
எங்கே தொலைந்து போனதென் நட்பென!!!-
யாருமில்லா தனிமையில்
மனத்தின் அயற்சியும்
உடலின் வலிகளும்
உள்ளூர எழும்பிடும் கலக்கமும்
நித்தம் நம்மை கேலி செய்யும் ஏமாற்றங்களும்
இசையின் வருடலில்
சற்றே ஆறுதல் கொண்டு
இதமாய் துயில்கொள்கின்றன
புதிதாய் ஓர் விடியலைத் தேடி!!-
அன்றாடம் அலுத்துக் களைத்து
அயர்ந்து படுக்கையில்
குதிகாலிலிருந்து மேலெழும்
கூரிய வலியொன்று
அழகாய் உணர்த்திச் செல்கிறது
அளவில்லாமல் நித்தமும்
அன்னை வார்த்த
தோசைகளில் அடங்கியுள்ள பாசம்தனை
-
உணர்த்த முடியா பல
உன்னத உணர்ச்சிகளை
கடத்திட முடியா பல
கவலைகளை
பேசித் தீர்த்திட முடியா பல
மனக்குமுறல்களை
உவர்நீராய் விழிகளில்
வெளியேற்றி
உன்னதம் புரிந்துவிடுகின்றன
மௌனத்தில் மனக்கேதம்
தீர்த்திடும் இதயங்கள்!!!-
இயலாத சமயம் இன்னல்
தீர்த்த கரங்களும்
எதிர்பார்த்து ஏங்கிய சமயம்
தாங்கிய கரங்களும்
நோய்நொடியில் வாடிய சமயம்
அரவணைத்த கரங்களும்
கண்ணீரில் மூழ்கிய சமயம்
கைகொடுத்த கரங்களும்
ஏனோ வெற்றுக்கரங்களாகிவிடுகின்றன
இக்காகிதத்தின் கதகதப்பில்
குளிர்காய்கையில்!!!-
மனச்சிறையில்
மருகிக்கொண்டிருந்த
மையலொன்று
மெலிதாய்த் தன்
கற்பனையில்
வாழ்வைத் தொடங்கியது
விடியும் வரை தடையேது என்ற
குதூகலிப்பில்-