காலம் ஓர் பெருநதி
அடித்துப் புரட்டி எங்கோ
இழுத்துச் செல்கிறது
மெல்ல தழுவி என்னை
முத்தம் இடுகிறது
வறட்சியும் வெள்ளமாய்
என்னை வாட்டி வதைக்கிறது
இன்பதுன்பங்களின்
அர்த்தம் அழிக்கிறது
எல்லாம் அனுபவமென
அடுத்த நொடி நகர்கிறது
நிரந்தரம் தானே என
நித்தமும் உரைக்கிறது
காலம் ஓர் பெருநதி அதில்
நானும் ஓர் கூழாங்கல்-
உயிர்ப்பில் மரணத்தையும்
வானவில்லில் கருநிறத்தையும்
ஒளிவெள்ளத்தில் இருட்துளியையும்
மாக்கூட்டத்தில் தனிமையையும்
ஆரவாரத்தில் மௌனத்தையும்
அமுதக் குப்பியில் விஷத்துளியையும்
நெடுநட்பில் அந்நியத்தையும்
பெருங்காதலில் வெறுப்பையும்
அனுபவித்துப் பழகிப்போன
அவனின்
உள்ளக்கூட்டின் ஒவ்வொரு செல்லும்
இன்னும் சுவாசித்துக்கொண்டிருப்பதற்கும்
இதயத்தசைகள் துடித்துக்கொண்டிருப்பதற்கும்
காரணம்
ஏதோ ஓர் இனம்புரியாத தேடலே...-
எனக்கிந்த இரவுகள் போதும்
இருண்ட நெடுஞ்சாலை போதும்
பிறை மதித் துணைபோதும்
தெருவிளக்கொளியே போதும்
விழி கலங்கிடும்பொழுது
அவள் நினைவுகளே போதும்
மனம் வாடிவிழும்போது
அவள் வாசனையே போதும்
விட்டுச் சென்றுவிடும்பொழுது
சிறு சிகைத்தீண்டல் போதும்
இனி எனக்கில்லையென்றால் - எங்கோ
அவளின் இருப்பொன்றே போதும்...
-
மழை வீழும் அந்திப் பொழுதில்
மது வழியும் கோப்பை அருகில்
புகை சூழும் அறையின் உள்ளே
போதை முழுதாய் மனதை நிறைக்க
முத்தங்களில் முகங்கள் மூழ்கி கிடக்க
அவள் கண்களிலேயே தொலைந்துபோக
விரல் இடுக்குகளிலேயே வாழ்ந்து இருக்க
அறைபட்டுச் சிவந்த கண்ணங்களோடு
அவளுடனேயே அணைத்து கிடக்கிறேன்
இப்படித்தான் கழிக்கப்போகிறேன்
இந்தவொரு ஆயுட்காலம்...
-
மத்திம வாழ்வின்
பெரும் மந்தத்தில்
இளையராஜாவோடும்
இன்ஸ்டாக்ராம் பதிவுகளோடும்
இடுங்கிச் சாகிறது
இந்த இளமை...-
மழைவரப்போகிறது
மாடித் துணி உலர்கிறது
மனம் வாடிக்கிடக்கிறது
கண்ணீர் விடப்பார்க்கிறது
துணிகள் மெல்ல நனையட்டும்
விழியும் கொஞ்சம் தூறட்டும்...-
காரனோடை பாலம்
கடக்கும்போதெல்லாம்
கொற்றலை ஆற்றங்கரையெங்கும்
தன் இரும்புக் கால்கள்
நான்கினை ஊன்றி
இருபுறமும் பெருங்கைகள் நீட்டி
வருவோர் போவோர்
வாழ்வோரையெல்லாம்
வருடவருடமாய்
பார்த்துக்கொண்டு
வாடி நிற்கும்
அந்த மின்கம்பங்களைக்
காணநேர்ந்தால்
நானும் விசாரித்ததாகச்
சொல்லிப்போங்கள்...
-
எரிந்த காகிதத்தில்
இருந்த எழுத்துபோல்
இறந்த உடலுக்குள்ளே
இறுகும் தசைகள்போல்
இருள்வெளிதனிலே
உலவும் விண்கல் போல்
முகவரி தெரியாத
குழந்தையின் பயணம்போல்
சிறுவாழ்வொன்றில்
பிறக்கும் ஒருகாதல்...
-
தன் கோடி முத்தங்களில்
எனக்கும் கொஞ்சம் தந்துபோகிறாள்
இந்த மழைக்காரி...-
இரவோடு விழித்திருக்கும்
நெடுஞ்சாலை விளக்கோடு
நீளும் உரையாடல்கள்
விடிந்தபின் உறங்கிப்போகின்றன
அடுத்த இரவுக்காக...-