புதிதாய் மலர்ந்த காதல்
புன்னகையை மட்டுமே
பரிசளிக்கிறது...
மெதுவாய் தவழ்ந்த கீதம்
மெல்லியளின் உணர்வை வருடுகிறது...
மஞ்சத்தில் பூத்த மலர்
மதியினை சுழற்றி அடிக்கிறது...
இதுவல்லவோ காதல்
இறுதி முடிக்கும் முன்பாக...
பஞ்சணைகள் ஈரமாகின்றன
பழமையின் வாசனையில்...-
நெஞ்சத்தில் நின்ற பாரம்
நெருங்கி வந்து நெருக்கியபடி இருந்தது
நெருடல் இல்லாமல் விலக்கி வைக்கவே
நெளிவு சுழிவை அறிந்து கொண்டேன்...
நேசமெல்லாம் பொய்மையில்லை தான்
நேரில் காணும் மனிதரை உணரும் வரை
நேற்று இன்று நாளை என்பதைக் கடந்து செல்ல
நேர்த்திக் கடன் செலுத்துகிறேன் தினமும்...-
கண்களும் பூத்திருக்க ஆகும் காலம் தான்
தோற்கவே நினைக்கிறேன் உன்னிடம்
தோள் சாய்த்து உறங்கும் போதிலே...-
ஒரு கோப்பைத் தேநீரால் உருவாகிய நட்பு
ஒரு நிலைப்பாட்டில் இல்லாமல் தவிக்கிறது
கண்ணீரைச் சுமந்தபடி...-
காதலின் சுவையறிந்ததாலோ என்னவோ
கவிதைகள் வாசிக்கும் போது
கருமணிகள் ஊடுருவிப் பார்க்கின்றன
காதலியை முன் நிறுத்தி
கனவின் வழியாக...
கார்மேகக் கூட்டம் சேர்ந்திருக்கும்
போதில்லாமல்
இளவேனில் கூடுகையிலும்...-
இமைகளும் மூடாத இரவில்
கடலலை வந்து போகும்
கண்களும் தூரமாகும்...
நேற்றைய நிலவு
இன்றைய நிறைவு
நாளைய பொழுதோ
நம்மிடை வரவு...
தேன் சிந்தும் பூக்கள்
தேடிடும் பாக்கள்
வண்டுகள் கோர்க்கும்
வாலிப பாக்கள்...
இதுவரை தேடிக் களைத்திடும் பொழுது
இமை சேர மறுத்திடும் இரவு
நலம் போக்கி அமர்ந்திடும் நிலவு
நானல்ல இங்கு நீயான பொழுது...-
காதல் சொல்லும் என் இனியவளே
என் கண்கள் தேடுதடி நீ சென்ற பாதையிலே...
உன் கொலுசு சத்தம் கேட்குதடி நெடுநேரம்
என் கனவினைத் தொலைக்கிறேன் அந்நேரம்...
உன் பாதங்கள் பதிந்த நிலப்பரப்பில்
என் பாதங்கள் இணைந்திட ஏங்குகிறேன்...
கை பிடித்து விரல் வருடி உன் தலை கோதிட
களம் அமைத்துக் கொடுத்ததே இந்தக் காலமடி...
மனவேகம் உனைத் தொடர
மதி மயக்கம் எனைத் தொடர
சில நேரம் சங்கமிக்க
சிறு வார்த்தை சொல்லிடுவாய்...-
இன்று
என் எண்ண வானில்
மழை...
பூரிப்புடன்
தொடங்கும் விடியல்...
சுவாசத்தின்
இடைவெளியின்மையை
உணர்ந்த பொழுது...
நிதானம்
தலை தூக்குகிறது...
உடலுக்கும்
மனதுக்குமான போர்
கொஞ்சம்
தணிந்திருக்கிறது
இப்பொழுது...
தூய்மையான
காற்றின் தேவையை
அவ்வப்போது
உணர்த்திவிட்டுப் போகும்
வாயு பகவானுக்கு
நன்றி சொல்கிறேன்
இன்று...-
ஆட்டம் கொடுக்கும் குடுவையின்
ஆழ்மனதின் ஆழத்தில்
ஆசைகளை நிரப்பிக் கொண்டு
ஆக ஒன்றுமில்லை என்றாலோ
ஆகிவிடுமா அனைத்தும்...
நிரப்பிய எண்ணங்களை
நிரப்பிடும் சுவாசங்களை
நிராகரிக்காமல் இருந்திடவே
நிராதரவைப் போக்கிக் கொண்டு
நின்மலனை எண்ணி ஓடுகிறது மனது...-
சுவைத்தவன்
சுவைக்க விரும்புவதில்லை...
பசியுடன் இருப்பவன்
சுவைத்துப் பார்த்ததில்லை...
சும்மாயிருப்பவன்
காண்பதைக் கண்டு
ரசித்து சுவைக்கிறான்...
சுகவீனனோ
அதுவும் நிலைக்காமல்
போகிறான்...-